தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @INCTamilNadu)-வில் மோடி அரசை விமர்சிப்பது போன்ற கேலிச் சித்திரம் ஒன்று பதிவேற்றப்பட்டிருந்தது.
பதில் சொல்லுங்கள் மோடி என தலைப்பிலான அந்தக் கேலிச் சித்திரத்தில், எரிவாயு விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சுற்றுச்சூழல் மாசு, வர்த்தகக் கொள்கைகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல தீவிரமான மக்கள் பிரச்சினைகள் குறித்து மோடி பதில் அளிக்காமல் வெளிநாட்டுக்கு விமானத்தில் சென்றுவிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கார்ட்டூனை, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ், ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தன்னிச்சையாக தடை செய்திருப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கண்டித்துள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகத் துறை தலைவர் எஸ்.நபில் அகமது அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்; அதில்,
அந்த கார்ட்டூன், இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாகப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டியுள்ளது. அதில் இடம்பெற்ற செய்தி மிகவும் நேர்மையானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில் வெறுப்புப் பேச்சு இல்லை. தூண்டுதல் இல்லை. சட்டவிரோதமான உள்ளடக்கம் எதுவும் இல்லை. அது முழுக்க முழுக்க அமைதியான அரசியல் விமர்சனம் மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்ட கருத்துரிமையின் வெளிப்பாடாகவே அந்த கார்ட்டூன் இருந்தது. ஒரு கார்ட்டூனுக்கே ஒரு அரசு அச்சம் கொள்கிறது என்றால், அது ஜனநாயகக் கண்காணிப்புக்கும் மக்கள் கேள்விகளுக்கும் அந்த அரசு அஞ்சுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அவற்றை மௌனப்படுத்தும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும்,
ஒரு கார்ட்டூனைத் தடுக்கலாம். ஆனால் உண்மையைத் தடுக்க முடியாது. ஒரு பதிவை மௌனப்படுத்தலாம். ஆனால் தமிழ்நாட்டின் குரலை மௌனப்படுத்த முடியாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
