தவறான சிகிச்சையால் தனது மகளின் கால் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, தலைமைக் காவலர் கோதண்டபாணி தலைமைச் செயலகம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவரது மகளுக்கு ஏற்பட்ட கால்வலி பிரச்சினைக்காக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார். சிகிச்சையின் போது ஏற்பட்ட பாதிப்பால, சிறுமியின் கால் பாதம் அகற்றப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சை அளித்ததால் தான் தனது மகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தலைமைக் காவலர் கோதண்டபாணி தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இன்றும் மகன் மற்றும் மகளுடன் தலைமை செயலகத்துக்கு போலீஸ் உடையில் வந்த கோதண்டபாணி, முதலமைச்சரை சந்திக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால் காவலுக்கு இருந்த போலீசார் அவரை அனுமதிக்காததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சாலையில் நிகழ்ந்த தொடர் வாக்குவாதம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மக்கள் ஆட்சி நடைபெறுவதாகவும், முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என கூறிய நிலையில், அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது..
