தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நடப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இன்று (ஜூலை 22, 2025) ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொடிக் கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
வழக்கு பின்னணி
பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் 2025 ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி நிஷாபானு தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்முறையீடு
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் P.சண்முகம் சார்பில் இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கருத்து சுதந்திரத்தின்படி அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. அடையாளங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்த தடை விதிப்பது, அதன் நோக்கத்தை சீர்குலைத்துவிடும். சொந்த இடங்களில் கட்சி கொடிக் கம்பம் வைக்க அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்காமல் கொடியை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜூலை 18ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.
முழு அமர்வின் விசாரணை
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவின்படி, மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சௌந்தர், நீதிபதி விஜயகுமார் அடங்கிய முழு அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினர். மேலும், சாலைகளில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் இடையூறு என்றால், சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சிலைகளும் இடையூறுதானே, அவற்றை ஏன் அகற்றவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிமன்றத்தின் புதிய உத்தரவு
இந்த வழக்கில் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் வெளிவரும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் முழு விளம்பரம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பின்னதாக வரும் எந்த மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் வெளிவரக்கூடிய ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுவரை, கொடிக் கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.