இணையத்தில் பரவிய பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் முடக்கப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் மீண்டும் பரவி வருகிறது என சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்றக் கோரி பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விடியோக்களை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் தரப்பில், இணையதளத்தில் வீடியோக்கள் முடக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில் 3 இணைதளங்களில் பரவி வருவதாகவும், புதிதாக ஒரு லிங்க் மூலமும் வீடியோ பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வீடியோக்களை நீக்க உத்தரவிட்டும் பின்னர் மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இந்த வீடியோக்களை பார்க்க முடிவதில்லை என்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி தொடர்ந்து பரவி வருகிறது என கேள்வி எழுப்பினார்.மேலும் இந்த வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சென்னை சைபர் கிரைம் காவல்துறை, இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தயாராக இருப்பதாகவும், தடய அறிவியல் துறை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில், பெண்களின் வீடியோக்கள் பகிரப்படும் போது புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக இணையளதங்களில் முடக்கி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வரும் செம்டம்பர் 2 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நல்ல பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் இருந்து நீக்கப்படுகின்றன, ஆனால் மோசமான வீடியோக்கள் மட்டும் அதிவேகமாக பரவி வருகிறது என வேதனை தெரிவித்தார். பெண் வழக்கறிஞர் வீடியோக்கள் இடம்பெற்ற 4 இணையதளங்களையும் முடக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.