குறைந்த செலவில் சிறப்பாக செயல்படும் மருத்துவ சாதனங்களை அதிகளவில் கொள்முதல் செய்யப் போவது எப்போது என, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு :-
துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் விரைவான ஒப்புதல்களை பெற, மருந்துகளை மையமாகக் கொண்ட மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பைத் (CDSCO) தவிர்த்து, தனித்து இயங்கக்கூடிய மருத்துவ சாதன ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவது குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் திட்டமிட்டுள்ளதா? எனில் அதன் விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பினார்.
பயனர்கள், உற்பத்தியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்து பொதுவெளியில் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், அமெரிக்க நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பில் (FDA) உள்ள, மருத்துவ சாதனங்கள் தொடர்பான அனுபவங்கள் பற்றிய தரவுத்தளம் (MAUDE) போல் அல்லது ஐரோப்பிய மருத்துவ உபகரணங்கள் குறித்த தரவுதளம் (EUDAMED) போல் நமது நாட்டிற்கென ஒரு தரவுத்தளத்தை உருவாக்கவும், மருந்துகள் சந்தைக்கு வந்த பின்பும் தொடர் கண்காணிப்பை வலுப்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினார்.
மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ சாதனங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நோயை கண்டுபிடிக்கும் வழிமுறைக்கு, ஏதேனும் ஒழுங்குமுறை அமைப்பை நிறுவ ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா? எனில் அதன் விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பினார்.
குறைந்த விலையில் சிறப்பாக செயல்படும் மருத்துவ சாதனங்களை கொள்முதல் செய்யவும் சுகாதாரம் சார்ந்த தொழில்நுட்ப மதிப்பீடுகளை விரிவுபடுத்தவும் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.
முக்கிய நோய்களை கண்டறியும் மற்றும் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படும் மருத்துவ உபகரணங்கள் மீது அடுக்கடுக்காக விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைத்து மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா, எனில் அதன் விவரங்கள் என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.
