கவல்  உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, இரண்டு ஆண்டுகள் தாமதமாக பதிலளித்த, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி மாணவர் பரத்ராஜ், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்வில் கலந்து கொண்டு எழுதியுள்ளார். ஆனால், தேர்வு முடிவுகளில், குறிப்பிட்ட அந்த தேர்வில் பரத்ராஜ் பங்கேற்கவில்லை என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விளக்கம் கேட்டு, தகவல்  உரிமை சட்டத்தின் கீழ், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு  பரத்ராஜ் விண்ணப்பித்து இருந்தார். இரண்டு ஆண்டுகளாகியும், அதற்கு பதில் அளிக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில் பரத்ராஜ் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி, 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்; ஆனால் இரண்டு ஆண்டுகளாக தகவல்களை வழங்காததால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். மேலும், தனது சான்றிதழ்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு, மாநில தகவல் ஆணையர் பிரியாகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழக பொது தகவல் அலுவலர் ஆஜராகி, மனுதாரர் அளித்த விண்ணப்பம், தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. ஆனால், ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில், மனுதாரர் கோரிய தகவல்கள்  வழங்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த ஆணையம், இரண்டு ஆண்டுகள் தாமதமாக தகவல் அளித்ததால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக, 20 நாட்களுக்குள் வழங்க  வேண்டும் என, பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், மாணவரின் சான்றிதழ்களை ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும் எனவும்,  இழப்பீடு, சான்றிதழ்கள் வழங்கியது குறித்து, மே 22ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பொது தகவல் அலுவலருக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version