முன்னாள் முதலமைச்சரும், அதிமுகு பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்கள் மீதும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இதற்காக போராட்டம் நடைபெறும் என்றும் கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தெரிவித்தார்.
கடந்த 17 ஆம் தேதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைதளங்களில் கார்ட்டூன் ஒன்றை பதிவேற்றினர். அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் விதமாக இருந்ததாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதை கண்டிக்கும் விதமாக அவதூறு பரப்பியவர் மீதும் அதன் துறை அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும், கஞ்சா, பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் , அவற்றையெல்லாம் திசை திருப்பும் விதமாக அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் விதமாக நாகரிகம் இல்லாமல் கேலிச்சித்திரத்தை திமுகவின் அதிகாரபூர்வ சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் கீழடி அகழ்வாராய்ச்சி கடந்த அதிமுக ஆட்சியில் தான் துவங்கப்பட்டது. உடனடியாக அந்த அவதூறு பதிவை நீக்கவேண்டும் மேலும் இதுபோன்ற அவதூறு பரப்பியவர்கள் மீதும், துறைசார்ந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.