திமுக அரசு நிகழ்த்திய சாதனைகளில் 5% ஆவது அதிமுக ஆட்சியில் நடந்தது என சொல்லமுடியுமா என்று ஓபன் சேலஞ்சாக கேட்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சிலரை போல் வாயில் வடை சுடும் அரசு அல்ல, ஆட்டோமொபைல் உற்பத்தி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு விளையாட்டு என அனைத்து துறைகளிலும் திமுக முதலிடத்தில் உள்ளது. இனி எப்போதும் ஏறுமுகம்தான் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நேரடியாக பயன்படக்கூடிய திட்டங்களை கொடுத்து, மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு இது. தீயணைப்பு, மீட்பு நிலையம், உயர்மட்டப் பாலம், சாலைகள் போன்ற பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம்.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிவது தமிழ்நாட்டில்தான். எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. பொதுப்போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பட்டியலிட்டால் மூச்சுவாங்கும் அளவுக்கு சாதனைகள் செய்துள்ளோம். ஒன்றிய அரசின் தரவரிசைகளில் எல்லாவற்றிலும் நம்பர் 1 ரேங்க் நம்மதான்.
நெஞ்சை நிமிர்த்தி, காலரை உயர்த்தி தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இதில் 5% ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? மத்திய அரசின் தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம். கிறிஸ்துமஸ் நாளிலும் மதவெறி தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.
எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பாஜவின் கண்களை உறுத்துகிறது. எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு வந்தாலும் சரி, தமிழ்நாட்டு மக்கள் விரட்டி அடிப்பார்கள். இந்த ஸ்டாலினைத் தாண்டி நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது. திராவிட மாடல் அரசின் 2.0 தொடரும் என்று சூளுரைத்தார்,
