திண்டுக்கல்லில் முதல் முறையாக தேசிய அளவிலான விழிப்புணர்வு நாணயக் கண்காட்சி நடைபெற்றது. பண்டைய மன்னர்களின் நாணயங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன.
திண்டுக்கல்லில் ரோட்டரி சங்கம் மற்றும் நாணயங்கள் பாதுகாப்பு சங்கம் இணைந்து முதல் முறையாக தேசிய அளவிலான நாணயங்கள் மற்றும் பழங்கால முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் முந்தைய மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்கள், பணத்தாள்கள், பழமையான பொருட்கள், அஞ்சல் தலைகள், வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் வெளிநாட்டு கரன்சிகள், மற்றும் பழங்கால மரம், தாமிரம், இரும்பான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் பேசும்போது, தற்காலத்தில் பிட் காயின், டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாணயம் பயன்பாடு குறைந்து வருகிறது.
இன்னும் 10 ஆண்டுகளில் நாணயம் பயன்பாடு அழிந்துவிடும். வரும் தலைமுறைகள் இந்த நாணயம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் மதிப்பினை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரிய நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
நாணயம் சேகரிப்பாளர் கோவையை சேர்ந்த சாம்சன் கூறுகையில், நான் எம்.காம் பட்டதாரி. என் தாத்தா பழங்கால நாணயம் சேகரித்து வந்தார். அதனால் நான் 10 வது வயதிலிருந்தே நாணயம் சேகரிப்பில் ஆர்வம் வந்தது. 20 வயதில் இருந்து முழு நேர நாணயம் சேகரிப்பில் ஈடுபட்ட்டேன். 2 ஆயிரம் ஆண்டுகள் முந்தைய மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்கள் சேகரித்துள்ளேன். சங்ககால மன்னர்கள், சேரன், செங்குட்டுவன், சோழன். பாண்டியன், மலையம்மான் உள்ளிட்ட இந்தியாவில் ஆண்ட 200 மன்னர்களின் நாணயங்கள் சேகரித்து வைத்துள்ளேன். அதேபோல் வெளிநாட்டு பழமையான கரன்சிகள் சேகரித்து வைத்துள்ளேன். 25 வருடமாக இந்தியா முழுவதும் பல்வேறு நாணய கண்காட்சியில் பங்கேற்றுள்ளேன். பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் இது வரவேற்பு பெற்றுள்ளது. முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர் என்றார்.