திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மார்ச் 16-ஆம் தேதி  திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வருகிற மார்ச் 16-ஆம் தேதி காலை 10:30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் 15ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால், மாவட்ட செயலர்கள் கூட்டம் மார்ச் 16ம் தேதிக்கு மாற்றப்பட்டது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் தொகுதிப் பங்கீட்டு நிலவரங்கள், கூட்டணி கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளின் தேர்தல் உத்திகளை முறியடிப்பது குறித்தும் மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் தேர்தல் களத்தில் திமுகவின் வியூகங்களை மாவட்ட வாரியாகச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. 2026 தேர்தலை நோக்கிய திமுகவின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் கூட்டமாக இது பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version