OPS திமுகவில் இணைந்ததை கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி, இன்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக பிளவுக்கு பிறகு OPS அணியில் இருந்த அவர், ‘புரட்சி அதிமுக’ என்ற கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக பேசி வந்ததால், தவெக கூட்டணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களை நாங்கள் நேரில் சந்தித்து ஏனென்றால் புரட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளேன். அது பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கம்.

கொள்கை கோட்பாடு எல்லாமே மதவாத சக்திகளுக்கு எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமை தான் சரியானது. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து ஆதரிப்பேன் என்று தெரிவித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்வதால் ஒரு இடத்தில் கூட விளையாட்டுக்கு சொல்லவில்லை அஇஅதிமுக வெற்றி பெறாது இதே நிலைமை எடப்பாடியிலும் இருக்கும்.

67 ஆம் ஆண்டுக்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் 10 ஆண்டுகள் தொடர்ந்தது இல்லை. ஆனால் இந்த முறை முதல்வர் தலைமையில் தொடர்ந்து பத்தாண்டு காலத்தை அவர்கள் வெற்றிகரமாக நடத்தப் போவதை நாம் பார்க்க போகிறோம்.

இதற்குக் காரணம் பழனிசாமி யாரோடும் ஒத்துப் போகாமல் இருப்பதன் காரணமாகத்தான் அமைந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விடியா திமுக அரசு என்று சொன்னார்கள், விடிந்ததும் ஐந்தாயிரம் ரூபாய் அக்கவுண்ட்டுக்கு செல்கிறது என்றார். பழனிசாமியால் அனைவரையும் அரவணைத்தும் செல்ல முடியவில்லை என்ற புகழேந்தி, 2026 தேர்தலுடன் பழனிசாமி கதை முடிந்துவிடும் என்றார்.

புரட்சி அண்ணா திமுக மூலமாக ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன். திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து தான் ஆக வேண்டும் அப்போதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வராது. நிச்சயமாக அதிமுக அடிமையாக இருக்கிறது.

திமுகவை ஆதரிக்க சரியான காரணம் சொல்ல வேண்டும், போயஸ் தோட்டம் வாசலில் நின்று கொண்டு பாஜகவினர் சீட்டு கேட்டு காத்திருந்ததை பார்த்திருக்கிறேன் ஆனால் டெல்லிக்கு சென்று இப்போது சீட்டு கேட்டு நிற்கும் நிலை உள்ளது. பொதுக்குழுவை கூட்டி எப்போது இருந்து ஆதரவை கொடுப்பது என்று தெரிவிப்பேன் இப்போது ஆதரவு தெரிவித்து விட்டு வந்தேன் என்றார்.

நமக்கு முக்கியமான விஷயம் வடக்கே இருக்கக்கூடிய சக்திகள் வரக்கூடாது. அவர்கள் தினகரனை ஏற்றுக் கொள்ளவில்லை. சசிகலா உள்ளே வந்தால் தலைமை போய்விடும் என்று தினகரன் பயப்படுகிறார். வாழ்த்துக்கள் என்று தான் சொல்ல முடியும்.

நிச்சயமாக இது தமிழ்நாட்டிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல். மதவாத கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரம் நாடு முழுவதும் தொடரும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று புகழேந்தி கூறினார். 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version