காவிரி நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று காவிரி நீர் பிரச்சினை மற்றும் குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் வறண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மட்டுமல்லாமல் அனைத்து கட்சித் தலைவர்களும் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் காவிரி பிரச்சினை எழுந்தபோது, அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அதுவே நடைமுறையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை ஆணையம் விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறக்க உத்தரவிட்டிருந்தும், அந்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை என்றார். இதனால் குறுவை சாகுபடிக்கு தேவையான நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது கர்நாடக அணைகள் நிரம்பியதால் உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்குள் விவசாயிகள் சந்திக்க வேண்டிய பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

“இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு பாசனத்தை மட்டுமே நம்பி சுமார் 2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வறண்டு சேதமடைந்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக களத்திற்கு அனுப்பி சேதத்தை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version