2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சூறாவளி சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். கோவையில் தனது பயணத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தனது பயணத்தின் போது மக்களிடம் உரையாற்றிய அவர், கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று. ஆனால் அதுகூடத் தெரியாமல் திராவிட இயக்கத்தின் துரோகியாக, கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு திமுக தலைவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது அந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஜூலை 14-ம் தேதி, பிற்பகல் 2.30 மணி அளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவரின் உத்தரவின்படி; ஏழை, எளிய, சாமானிய மாணவர்களுக்கு உயர்கல்வி பெற முதலமைச்சர், கல்லூரிகளைத் திறந்து வைத்ததை “கல்லூரிகளைத் திறப்பது சதிச்செயல்” என பதவி சுகத்துக்காக பேரறிஞர் அண்ணாவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி இப்போது, “உங்களுக்கெல்லாம் எதற்கு கல்வி?” என்ற சங்கிகளின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார். அதனை கண்டித்து திமுக முன்னணி தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும்” கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version