திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமம், பூதமரத்துப்பட்டி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 20ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருமணம் என்னும் பூரண நாடகம் கோயில் முன்பாக அமைந்துள்ள சிங்கார கலையரங்கில் நடைபெறும்.
ஆனால் தற்போது திமுக கிளைச் செயலாளர் குணசேகரனின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் சேர்த்து தனியாக டிரஸ்ட் ஒன்றை இரண்டு வருடத்திற்கு முன்பு உருவாக்கி தற்போது கோயில் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் கோயில் நாடகம் மேடை அமைக்கும் இடத்தை தங்களது இடம் என கூறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறையிடம் புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது திருவிழாவிற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் 5 பேர் இணைந்து பிரச்சனை செய்து வருவதாகக் கூறி 50க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.