அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று, அண்மையில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். ஓபிஎஸ் தனது கோட்டையான போடிநாயக்கனூர் தொகுதியிலும், ரவீந்திரநாத் ஆண்டிப்பட்டி தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். தலைமை இவர்களுக்குப் போட்டியிடப் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், இது தேனி மாவட்ட திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஆண்டிப்பட்டி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ள மகாராஜன் மற்றும் கடந்த பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள், தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என மலைபோல நம்பியிருந்தனர். ஆனால், நேற்று வந்தவர்களுக்கு இன்று முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். “தன்னுடன் வந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும்” என ஓபிஎஸ் தரப்பு அழுத்தம் கொடுப்பதால், ஆண்டிப்பட்டி மற்றும் போடி ஆகிய இரு தொகுதிகளிலும் திமுகவின் பழைய முகங்களுக்குப் பதில் புதிய முகங்களே களம் காணும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த உட்கட்சிப் பூசலைத் தணிக்க திமுக தலைமை தற்போது போர்க்கால நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ. மகாராஜன் மற்றும் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளைத் தலைமை  சமாதானம் செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. “கட்சியின் வெற்றிக்கும், தென் மாவட்டங்களில் செல்வாக்கை நிலைநாட்டவும் இந்தச் சமரசங்கள் அவசியம்” என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நீண்டகால நிர்வாகிகள் இந்தத் திடீர் மாற்றத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version