தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பங்கள், அதிமுகவுக்குள் மிகப்பெரிய பிளவையும் அதிகாரப் போராட்டத்தையும் உருவாக்கியுள்ளன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிற கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ளது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்பி வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உட்கட்சி மோதல் வீதிக்கு வந்துள்ளது.

தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான எஸ்பி வேலுமணி அணியினர் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகின்றனர்.  அந்தவகையில், தேர்தல் தோல்வி குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் எனக் கூறி, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான முயற்சிகளில் வேலுமணி இறங்கியுள்ளார். இதற்காக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து, பொதுக்குழுவைக் கூட்டக் கோரி ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்து வாங்கி வருகிறார் வேலுமணி.

அதேசமயம், பொதுக்குழு கூடினால் வேலுமணி தரப்பு தமக்கு எதிராகப் பெரிய அளவில் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளாராம்,  அதாவது வேலுமணி தரப்பில் இருந்து பொதுக்குழுவைக் கூட்டக் கோரி யார் கையெழுத்து கேட்டாலும், நமது ஆதரவாளர்கள் யாரும் அதில் கையெழுத்திடக் கூடாது” என்று இபிஎஸ் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே ‘நமது அம்மா’ நாளிதழில் இபிஎஸ் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், பொதுக்குழு விவகாரத்தில் இரு தரப்பும் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version