இந்தியாவை இந்து தேசம் என அறிவிப்பதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு எனவும், 140 கோடி இந்திய மக்களின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்.கிருஷ்ணசாமி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அரசியல் சாசனம் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய பொக்கிஷம். 200 ஆண்டுகால ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வதே அன்று சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பிரதான லட்சியமாக இருந்ததுள்ளது. அதனால் தான் “வெள்ளையனே வெளியேறு” என்பது அவர்களின் முக்கிய கோசமாக இருந்தது. சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தியாவை எப்படிப்பட்ட சமூகமாக உருவாக்க வேண்டும் என்பதில் போராட்டத்தை  முன்னெடுத்தவர்களில் சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு சிலரைத் தவிர, எவருக்கும் பரந்துபட்ட சிந்தனை இல்லை.

அரசியல் சாசனத்தில் காஷ்மீரைத் தவிர, இந்தியாவில் எவரும் சொத்து வாங்கலாம் என்ற சரத்தும் இருந்ததுள்ளது; ஆனால் அனைவரும் சொத்து வாங்குவதற்கான வழிமுறைகள் அதில் சொல்லப்படவில்லை. இன்று வரை அதற்கு வழியும் இல்லை. தனியுடமையே இந்தியச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம் ஆகிவிட்டது. எனவே இந்தியச் சமூகம் சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது. மதச்சார்பின்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் கோஷமே தவிர, 140 கோடி இந்திய மக்களின் உள்ளக் கிடங்கை வெளிப்படுத்தக் கூடியது அல்ல.! குறிப்பிட்ட ஒரு சில நபர்கள், அரசியல் கட்சிகள் சில மதங்களின் மடிகளில் சாய்ந்து கொண்டு பேசுகின்ற போலித்தத்துவமாக மதச்சார்பின்மை இருக்கக் கூடாது.

எந்த மதத்தையும் உண்மையில் சாராமல் நின்று பேசுவதாக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியும் ஒரு தேசிய இனம்; எனவே, ‘சாதிகளை’ தேசிய இனமாக அங்கீகரித்துவிட்டு, ‘இந்தியாவை – இந்து தேசமாக’ அறிவிப்பதே இந்தியாவிற்கும் பாதுகாப்பு! இந்திய மக்களுக்கும் பாதுகாப்பு.!” என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version