Dude திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி, உருமாற்றி தீபாவளிக்கு வெளியான Dude திரைப்படத்தில், பயன்படுத்தி உள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இரண்டு பாடல்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பாடல்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நடைபெற்ற விசாரணையில், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாடலை உருமாற்றி உள்ளதால் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
பாடல்களின் உரிமை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடம் இருந்து அனுமதியை பெற்று, இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் Dude திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.
இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தி உள்ளதற்கு முகாந்திரம் உள்ளதாக தெரிவித்தார். அவரது பாடல்களின் புனிதத்துக்கும், அவரது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி, Dude படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் இன்று (டிச. 3) விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும், பாடலை பயன்படுத்தியதற்காக படத்தில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞர் ஏ.சரவணன் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
