சென்னை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நகர மன்ற தலைவர் திருமலை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி மற்றும் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, “முதலமைச்சர் தலைமையில் நடந்ததுதான் உண்மையான முருக பக்த மாநாடு. அந்த மாநாட்டில் ஆதீனங்கள் நீதி அரசர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆனால் பாஜக நடத்தும் இந்த மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படும் அரசியல் மாநாடு. முழுக்க முழுக்க மத வெறியை தூண்டும் மாநாடு இது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால் இதனை பொதுமக்களே புறக்கணிப்பார்கள். அதிமுக கூட்டணி கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்படவில்லை. அப்படிப் பார்த்தால் காவல்துறை ஏடிஜிபி மீது கூட தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவர் என்ன அதிமுகவின் கூட்டணி கட்சியா? திமுக கூட்டணியில் விரிசல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் திமுக கூட்டணியில் விரிசலும் கிடையாது. அது எடப்பாடி பழனிசாமியின் கற்பனை” என்றார்.
”உண்மையில் எடப்பாடி பழனிசாமி தான் அமித்சாவின் மாயவளையில் சிக்கி வேதனையில் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்றால் ஆட்சியில் இருக்கும் குறைகளை பற்றி பேச வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளுங்கட்சியின் கூட்டணி கொடுத்து பேசக்கூடாது. யார் அந்த சார்? என்று ஒற்றை வார்த்தையை பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் அதனை புறக்கணித்து விட்டார்கள்” என்று தெரிவித்தார்.