கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜூ தெரிவித்தார்.

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு அனுப்பப்படுகிறது.

இதேபோல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர, நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதன்படி நாமக்கல் மண்டல முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 625 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பிறப்பு மற்றும் கடுங்குளிர் காரணமாக முட்டை விலை அதிகரித்து வருவதாக கோழிப்பண்ணைாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த பண்டிகைகளில் கேக் முக்கிய இடம் பிடிக்கிறது. கேக் தயாரிப்பிற்காக முட்டை அதிகளவு கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவும் விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணமாகும்.

நாடு முழுவதும் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி அதிகரிப்பும் முட்டையின் விலை உயர்வுக்கு ஒரு காரணம்.

முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குளிர் மற்றும் பண்டிகை சீஸன் குறைந்தால் முட்டை விலை குறைய வாய்ப்புள்ளது. கடும் குளிர் காரணமாக முட்டை உற்பத்தி 5 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது, என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version