வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது என்றும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் மாநில மின்துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கனவே விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தற்போது மீண்டும் மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை என்றும் மின் கட்டணம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
