திருப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டரில் பலியானார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏவான மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் உள்ளது. தென்னை சாகுபடி செய்யப்படும் இந்த தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவர் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
மூர்த்தியின் மற்றொரு மகனான தங்கபாண்டி, கடந்த 5-ம் தேதி இரவு தென்னந்தோப்புக்கு வந்துள்ளார். அங்கு அனைவரும் கறி விருந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது தந்தை-மகன்களுக்கு இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மணிகண்டன் தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மூர்த்தி திருப்பூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தன்னை தனது மகன்கள் கொலை செய்ய முயற்சிப்பதாக கூறியிருக்கிறார். அதன்பேரில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் அழகுராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது, தந்தை-மகன்களுக்கு இடையே நடந்த சண்டையை விலக்கி விட முயற்சித்த போது, எங்கள் பிரச்னையில் தலையிடுவதற்கு நீங்கள் யார்? என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்தோடு மணிகண்டன் அங்கிருந்த அரிவாளால் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அத்தோடு அங்கிருந்த காவல்துறையின் வாகனத்தையும் தந்தை மகன்கள் சேதப்படுத்தியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்தோடு தலைமறைவான தந்தை மகன்களை 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையில் மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை சரணடைந்தனர். அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவான மணிகண்டனை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான மணிகண்டனை போலீசார் என்கவுண்டர் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ”கைது செய்யச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சரவணக்குமாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற போது, தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக” தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உடுமலை மின்மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சண்முகவேலின் உடல் தகனம் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த சண்முகவேலின் குடும்பத்தினருக்கு ரூ.1கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கொலை சம்பவத்தில் தொடர்புடைய தந்தை-மகன்கள் 3 பேர் மீதும், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
