கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள். இப்போது தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. நான் இப்போது தான் சென்னைக்கு செல்கிறேன். அதற்குள் எல்லா விஷயங்களுக்கும் எப்படி பதில் சொல்ல முடியும்…?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில்,“உங்கள் வீட்டு பொருளாதாரத்தை பற்றி கேட்டால் உடனே பதில் சொல்ல முடியுமா…? அது போலத் தான் அரசின் செயல்பாடுகளும். ஒவ்வொன்றாக முன்னேறும் முதலமைச்சர் விஜய் அறிவித்த 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை மக்கள் வரவேற்று உள்ளனர். மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

டாஸ்மாக் கடைகள் குறித்து பேசிய அவர், “பேருந்து நிலையங்கள், ஆலயங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் 717 கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. பொறுப்பேற்ற உடனேயே இவ்வளவு சாதனைகள் செய்து இருப்பது முதலமைச்சர் விஜயை தவிர வேறு யாரும் இல்லை” என்று கூறினார்.

அதிமுக குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடுகளை பார்க்கும் போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா உருவாக்கிய இயக்கம் வலுவிழந்து உள்ளதாகத் தான் தெரிகிறது. நான் ஒருவரே போதும் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார். அதை காலத்தின் கட்டாயம் மாற்றிக் காட்டும். அதிமுக-வுக்கு எவ்வளவு அமைச்சர்கள் என்பதைக் நீங்கள் தான் சொல்ல வேண்டும்; நாங்கள் இதுவரை எதுவும் கூறவில்லை” என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version