தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இபிஎஸ் – எஸ்.பி.வேலுமணி என மீண்டும் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் சி.வி.சண்முகம், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முன்மொழிவுகளை வைத்தார்.
இந்த இயக்கம் தி.மு.க.வை எதிர்த்து தான் தொடங்கப்பட்டது. இந்த 53 ஆண்டுகாலம் தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்கிறோம். 3, 4 தலைமுறைகளாக தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்து வருகிறோம். இந்த சூழலில், எந்த தி.மு.க-வை எதிர்த்தோமோ அந்த தி.மு.க வின் ஆதரவோடு அ.தி.மு.க சார்பில் என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதற்கு நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதனை பெரும்பாலான சட்டமன்ற உறுதிப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். தி.மு.க-வோடு இணைந்தால் அ.தி.மு.க இல்லாமல் போய்விடும், இது தவறு என்றோம். அதனை ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி.
அதனால் பெரும்பான்மையான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ளது. அதனால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இப்போது இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று வெற்றிபெற்றுள்ள முதலமைச்சராக உள்ள விஜய்யின் த.வெ.க ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
அ.தி.முக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்.பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ஹரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலராக காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். நடந்து முடிந்த தேர்தலில் மட்டுமல்ல, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அ.தி.மு.க-வுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை பொதுச் செயலாளரிடம் கூறியுள்ளோம். விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் கோரிக்கை வைக்கிறோம். கட்சியை மேம்படுத்த எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம்” என்று பேசினார்.
