அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்தே முதலமைச்சர் ஸ்டாலின் தில்லி சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்தே நேற்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால், நிதியைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மோதியின் தமிழக வருகையின்போது கருப்பு பலூன் விட்டதாகவும், ஆளுங்கட்சியான பிறகு வெள்ளைக்குடை பிடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். தமிழகத்தில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல ஆட்சி நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.