தனிமனித பொருளாதார வளர்ந்தால் தான் முதல்வர் கூறியது போல் 2030ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் தமிழக வளர்ச்சி அடையும் என்று கள்ளக்குறிச்சியில் புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து அமைச்சர் எ.வ. வேலு பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம்,மற்றும் தினசரி காய்கறி அங்காடி கட்டிடங்கள்,குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றிற்கான ரூ.46.30 கோடி மதிப்பிலான புதிய கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொது பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில்:- தமிழக முதல்வர் 2030ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு ட்ரில்லியன் டாலர் ஆக உயரும் என கூறியுள்ளார்.அந்த பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனித பொருளாதார வளர்ச்சி -மற்றும் கிராமங்கள், பேரூராட்சி நகராட்சி என அனைத்து தரப்பு வளர்ச்சியும் இருந்தால்தான் முதல்வர் கூறிய வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் பேசினார்.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன் , உதயசூரியன், மணிகண்டன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் வணிகர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.