தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் சி.எஸ்.ஐ பள்ளி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 149-வது வாக்குச்சாவடி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 196-வது வாக்குச்சாவடி மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி 128 மற்றும் 130-வது வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுதானதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்குள் வாக்களிக்க வந்த முதியவர்களும், பெண்களும் வாக்குப்பதிவு தாமதமாவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் வாக்குச்சாவடிகளிலும் இந்த இயந்திரக் கோளாறுகள் எதிரொலித்துள்ளன. குறிப்பாக, திருச்சியில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அங்குள்ள EVM இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 50 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது. அதன் பின்னரே அவர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பழுதான இயந்திரங்களைச் சரிசெய்யும் பணிகளில் தேர்தல் ஆணையப் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மாற்று இயந்திரங்களை வழங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்தத் தாமதங்கள் காரணமாக பல இடங்களில் வாக்காளர்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version