சிங்கபெருமாள் கோவில் அடுத்த மருதேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னை கடித்த நல்ல பாம்புடன் சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த மருதேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (38). விவசாயியான இவர், தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, தன்னை ஏதோ சீண்டியது போல உணர்ந்துள்ளார். இதனையடுத்து விவசாயி முத்து, தன்னைச்சுற்றி பார்த்தபோது, நல்லபாம்புக் குட்டி ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்துள்ளது.

இதற்கிடையில் முத்துவிற்கு மயக்கம் ஏற்ப்பட்டது. முத்துவோடு உடன் இருந்த உறவினர் ஒருவர், முத்துவை கடித்தது இந்த பாம்புதான் என அந்த பாம்புக் குட்டியை பிடித்தார். மேலும், அந்த பாம்புக் குட்டியை கவர் ஒன்றில் போட்டுக்கொண்டு நேரடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக முத்துவை அழைத்துச் சென்றார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முத்துவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்லப்பாம்புடன் முத்து சிகிச்சை பெற வந்ததை கண்ட சக நோயாளிகள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்ப்படுத்தியது.

மேலும், குட்டி பாம்பாக இருந்தாலும் பாம்பு சீண்டிய சிறிது நேரத்தில் சிகிச்சைக்கு வந்ததால், விஷம் தலைக்கேறாமல் தடுத்து உயிர் சேதமின்றி காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version