கடைமடை பாசனத்திற்கு நீர் வரவில்லை என விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் 134 பாசன சபை உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 21 பாசன சபை உள்ளது. 250 கிராமங்களில் 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இந்த கிராமங்கள் அனைத்தும் கடை மடையாக உள்ளதால் திறந்து விடப்படும் தண்ணீர் அனைத்தும் வழியிலேயே திருடப்பட்டு தங்களுக்கு உரிய நீர் வந்து சேர்வதில்லை எனவும் உரிய முறையில் கடை மடைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் போராடி வரும் நிலையில் இன்று காங்கேயம் காளை ஆடு குதிரை என கால்நடைகள் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர் சகிதம் பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் அணையின் கண்காணிப்பு பொறியாளரை முற்றுகையிட விவசாயிகள் காங்கேயம் அடுத்த ஓலப்பாளையம் அருகே பகவதி பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து விவசாயிகள் பொள்ளாச்சி செல்ல முயன்ற போது காவல்துறையினர் அனுமதி மறுத்து தடுத்தனர் இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்த போலீசார் தோட்டத்தை சுற்றிலும் கயிறு கட்டியும் தடுப்புகள் அனைத்தும் விவசாயிகள் சாலைக்கு வராத வண்ணம் தடுப்புகள் அமைத்தனர். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது கம்பி வேலிகளை அறுத்துக் கொண்டு காளை குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் சாலைக்கு வந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசாரம் விவசாயிகளை கைது செய்ய முயன்றதால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது மேலும் விவசாயிகள் காளைகளை அவிழ்த்து விட்டதன் காரணமாக போலீசார் மீது காளைகள் பாய்ந்தது இதனால் போலீசார் காளைகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காங்கேயம் கரூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் நான்கு போலீசார் லேசான உள்காயம் அடைந்தனர். மேலும் விவசாயிகளிடம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலமுருகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது காவலர்கள் மீது மாடுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதியப்படும் எனவும் எச்சரித்தார்.