சென்னை அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்த சகாய பிர்வீன் என்ற ஐ.டி நிறுவன அதிகாரி, மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி மேரி மெர்சியை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.

மனைவியின் உறவினரான செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் ஆண்டனி ஸ்டாலின் தூண்டுதலின்படி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுமதி, 2020ம் ஆண்டு தன்னையும் தனது குடும்பத்தினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து, தனது தாய் பெயரில் உள்ள வீட்டின் சாவியை வலுக்கட்டாயமாக பறித்து மனைவியிடம் கொடுத்து கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.

சாவியை ஒப்படைக்க மறுத்த போது, தன்னை மனைவி குடும்பத்தினர் முன் அடித்து, தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தியதால், பெண் ஆய்வாளர் சுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பெண் ஆய்வாளர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதால், பாதிக்கப்பட்ட சகாய பிரவீனுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

இத்தொகையை பெண் ஆய்வாளர் சுமதியிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்ட ஆணையம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version