AVM திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான சரவணன் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான AVM-ஐ ஏவி மெய்யப்ப செட்டியார் 1945ம் ஆண்டு துவங்கினார். திரை உலகில் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களை உருவாக்கிய நிறுவனம் AVM. ஏராளமான நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராஜ்குமார், எஸ்எஸ் ராஜேந்திரன், வைஜயந்தி மாலா, கமல்ஹாசன் என பல திரை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய பெருமை AVM-ஐ சேரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களை AVM நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏ.வி. மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த நிறுவனத்தை, அவருக்குப் பிறகு AVM சரவணன் கவனித்து வந்தார். தற்போது அவரது மகன் எம்.எஸ்.குகன் கவனித்து வருகிறார்.

இந்தநிலையில், வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த AVM சரவணன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று (டிச. 4) காலை காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் உள்ளிட்ட விருதை சரவணன் பெற்றுள்ளார்.

AVM நிறுவனம் தயாரித்த படங்கள், திரையரங்குகளில் வெளியாகும் போது, துவக்கத்தில் திரையில் காட்டப்படும், ‘AVM PRODUCTIONS’ என்று வரும் எழுத்துக்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version