கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் முன் கண்ணீர் சிந்தி உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், கோபிசெட்டிபாளையம் தொகுதி தற்பொழுது ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீண்டகாலமாக அதிமுகவின் கோட்டையாகவும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செல்வாக்கு மிக்க தொகுதியாகவும் விளங்கிய கோபியில், இந்த முறை அரசியல் காட்சிகள் முற்றிலும் மாறியுள்ளன. அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், முதல்முறையாக ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரச்சாரத்தின் இறுதித் தருணத்தில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய அவர், விஜய் தனக்கு அளித்த நெகிழ்ச்சியான அறிவுரை குறித்துப் பேசும்போது மேடையிலேயே கண் கலங்கினார்.
பரப்புரையின் போது செங்கோட்டையன் கூறுகையில், தான் விஜய்யின் புகைப்படத்தைச் சட்டைப் பையில் வைத்திருந்தபோது, அதைத் தடுத்த விஜய், “நீங்கள் ஒரு மூத்த தலைவர், உங்கள் சட்டைப் பையில் என்றும் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பதே எனக்குப் பெருமை” எனக் கூறியதாகத் தெரிவித்தார். இத்தகைய பெருந்தன்மை மிக்க ஒரு தலைவரைப் பார்ப்பது அரிது என்று உணர்ச்சிவசப்பட்டு அவர் அழுதது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் இந்த எமோஷனல் பேச்சுக்கு, அதிமுகவினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கட்சியை விட்டுச் சென்றாலும், தேர்தலில் வெற்றி பெற இன்னமும் ஜெயலலிதாவின் பெயரையே அவர் நம்பியிருப்பதாக அவர்கள் விமர்சிக்கின்றனர்.
மறுபுறம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், செங்கோட்டையனை ஒருமையில் விமர்சித்துத் தாக்கிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த போது, சட்டைப் பையில் ஜெயலலிதா படம் வைத்திருந்ததை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிற கட்சியினரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறுவதால், கோபி தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
