அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தனது கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் ஓபிஎஸின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மருது அழகுராஜ், சுப்புரத்தினம் உள்ளிட்ட பலரும் திமுக மற்றும் தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். இதேபோல், அதிமுகவில் இருந்து திமுகவிற்கும், திமுகவில் இருந்து அதிமுகவிற்கு நிர்வாகிகள் மாறி வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அதிமுக காய்களை நகர்த்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். அதாவது, திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கே.சி.வீரமணி உடனான கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அக்கட்சியின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த நிலோபர் கபில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக் கூட்டங்களில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது மற்றும் பெயரளவுக்கே அழைக்கப்படுவது போன்ற செயல்களால் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில், தனது ராஜினாமா கடிதத்தை நிலோபர் கபில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளார். இதனிடையே ஜோலாபேட்டையில்  இன்று நடைபெறவுள்ள திமுக வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டிற்கு நிலோபர் கபில் சென்றுள்ள நிலையில், அவர் திமுகவில் இணைவது உறுதியாகியுள்ளது.  நிலோபர் கபில் போன்ற சிறுபான்மையின செல்வாக்கு மிக்க தலைவர்கள் வெளியேறுவது, குறிப்பிட்ட தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version