முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அசோக்குமார் இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அசோக்குமாருக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் அவர் ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ள முடியும் என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகள் அமெரிக்காவில் ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அப்படி எதுவும் இல்லை என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் பதிலளித்தார்.

இதையடுத்து, அமெரிக்காவில் அசோக்குமார் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version