20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது என்றும் முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்தமாணவர்களுக்கும் மணிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல், ஏசர், எச்பி ஆகிய நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. intel i3, 8 BG RAM 256 GB SSD மெமரி, Windows 11 Home Strategic மற்றும் BOSS LINUX OS ஆகிய மென்பொருள்கள் நிறுவப்பட்டு, கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்கான MS OFFICE 365, Perplexity Pro வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது. விலையில்லா மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
