2011-ல் 29 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த தேமுதிக, இன்று தனது அரசியல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையான 10 இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2006-ல் தனித்துப் போட்டியிட்டு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அக்கட்சி, பின்னர் பல்வேறு கூட்டணிகளில் இணைந்து போட்டியிட்டாலும் வாக்கு சதவீதத்தில் பெரும் சரிவையே சந்தித்தது.
தேமுதிக கடந்து வந்த பாதை: 2006 – 232(தனித்து போட்டி), 2011- 41(அதிமுக+), 2016 – 105(மக்கள் நலக் கூட்டணி), 2021 – 60(அமமுக+), 2026 – 10(திமுக+). குறிப்பாக 2021 தேர்தலில் வெறும் 0.43% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், தற்போது திமுக கூட்டணியில் 10 இடங்களைப் பெற்றுள்ளதை அக்கட்சியின் இருப்புக்கான ஒரு போராட்டமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
திமுக கூட்டணியில் இதுவரை 9 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 28 இடங்களும், தேமுதிகவுக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் விசிக (8), சிபிஐ (5), சிபிஎம் (5), மதிமுக (4) என மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தற்போது கைவசம் 168 இடங்களை வைத்துள்ளது. மஜக மற்றும் எஸ்டிபிஐ போன்ற சிறிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையாத நிலையில், உதயசூரியன் சின்னத்தின் பலம் கடந்த முறையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் இந்தத் தேர்தலின் மிகப்பெரிய திருப்பமாக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் களத்தில் இருந்து விலகி திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்த மநீம, இம்முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் திமுகவின் வெற்றிக்காகப் பணியாற்றுவதாக முடிவெடுத்துள்ளது. இது திமுகவுக்கு நகர்ப்புற வாக்கு வங்கியில் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என நம்பப்படுகிறது. அதேபோல், சிறிய கட்சிகள் பலவும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்புள்ளதால், திமுகவின் நேரடிப் போட்டி பலமானதாக அமையும்.
175 இடங்களில் உதயசூரியன்? கூட்டணியில் உள்ள மதிமுக (3), மமக (2) மற்றும் கொமதேக (2) போன்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடச் சம்மதித்துள்ளன. இதன் மூலம், திமுக தனது சொந்தச் சின்னத்தில் மட்டும் சுமார் 175 தொகுதிகளில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது. இது ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பலத்தைப் பெற உதவும் என்பது திமுகவின் கணக்கு. எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்து தற்போது இரட்டை இலக்கத் தொகுதிப் பங்கீட்டுக்குத் தள்ளப்பட்டுள்ள தேமுதிக போன்ற கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய மிக முக்கியமான களமாகும்.
