சமூக வலைத்தளங்களில், குறிப்பாக யூடியூபில் உணவகங்கள் குறித்து ‘ஃபுட் ரிவ்யூ’ (Food Review) செய்யும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பல யூடியூபர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு (Paid Promotions), உணவின் தரம் மற்றும் கடையின் சுகாதாரம் குறித்து ஆராயாமல், வெறும் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே ரிவ்யூக்களை வெளியிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதனை முறைப்படுத்த நுகர்வோரின் ஆரோக்கியத்தை முன்னிறுத்திச் சில முக்கிய விதிகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத் துறையின் புதிய முக்கிய விதிகள்:
- FSSAI கட்டாயம்: யூடியூபர்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான உரிமம் அல்லது பதிவு பெற்ற உணவகங்களில் மட்டுமே இனி ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும்.
- அலங்காரத்திற்கு தடா: கடையின் வெளித்தோற்றத்தையும், உள் அலங்காரத்தையும் (Interior & Exterior) மட்டுமே கவர்ச்சியாகக் காட்டி இனி வீடியோக்களை வெளியிடக் கூடாது.
- சமையலறை சுகாதாரம்: உணவகங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம், சமையலறை மற்றும் உணவுகள் தயாரிக்கும் இடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை நேரடியாகக் கண்காணித்துக் காட்சிப்படுத்த வேண்டும்.
- ஊழியர்கள் கட்டுப்பாடு: கடையில் பணியாற்றுபவர்கள் மற்றும் உணவு தயாரிப்பவர்கள் முறையாகக் கையுறை (Gloves) மற்றும் தலையுறை (Headgears) அணிந்துள்ளனரா என்பதையும், அங்கு வழங்கப்படும் குடிநீர் தரமாக உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இனிவரும் நாட்களில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி உணவகங்கள் செயல்படுவதை உணர்ந்து மட்டுமே ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் உணவகங்கள் மற்றும் தவறான விளம்பரப் பதிவுகளைப் பரப்பும் சமூக வலைத்தளப் பக்கங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
