கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக பாமகவில் இருந்து ஜி.கே. மணி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025&ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி அவர்கள் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது.

அதை ஏற்று ஜி.கே.மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version