ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கமுடியவில்லை என அன்புமணி தெரிவித்த சில நிமிடங்களில், நேரில் சந்தித்த புகைப்படத்தை ஜி.கே.மணி வெளியிட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று முன்தினம் (05-10-25) இரவு அப்போலோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டார். மாதம் மாதம், பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு செல்லும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

இதனையடுத்து, மருத்துவர் ராமதாஸின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் நேற்று திங்களன்று மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து, ராமதாஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று இருதய மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அவர் ஐ.சி.யூவில் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.

இந்நிலையில், ராமதாஸின் ஆதரவாளரும், முன்னாள் பாமக தலைவருமான ஜி.கே.மணி ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் மருத்துவர் அய்யா அவர்கள் உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார். மருத்துவர்களும், மருத்துவப் பரிசோதனையும் உடல் நலம் ஆரோக்கியமுடன் உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், சமீபகாலமாக இலேசான பிரச்சனை இருப்பதை அறிந்ததும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக் கொண்டுவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version