கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மாலை நேரத்தில் அதிரடியாகக் குறைந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுடன் தொடங்கிய நிலையில், மாலை வர்த்தகத்தில் விலை தலைகீழாகச் சரிந்தது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.13,350-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.2,560 என்ற மிகப்பெரிய அளவில் சரிந்து ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது போன்றவை தங்கம் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. உலகளாவிய சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதால், அதன் தாக்கம் உள்ளூர் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் மற்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
