திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசுப் பேருந்து மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் என்ற இடத்தில் பேருந்து சென்ற போது, திடீரென பேருந்தின் டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர் திசையை நோக்கிச் சென்றது. அப்போது எதிரே அடுத்தடுத்து வந்த கார்கள் மீது அரசுப் பேருந்து பயங்கரமாக மோதிய விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து உடனடியாக விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், சிகிச்சை பலனின்றி பெண் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக சென்னையில் இருந்து திருச்சி செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
