ஆற்காடு அருகே அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்த நிகழ்வில், 45 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு தடம் எண் 37 மகளிர் விடியல் பயணப் பேருந்து சென்று கொண்டிருந்தது. 45 பயணிகளுடன், சக்கரமல்லூர் அண்ணா நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வந்தது.
இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதோடு பயணிகளை கீழிறங்குமாறு கூறி அறிவுறுத்தி அவரும் இறங்கிவிட்டார்.
இதையடுத்து பயணிகள் அவசரகதியில் அலறியபடி பேருந்துவிட்டு கீழிறங்கினர். அடுத்த சில நிமிடங்களில், என்ஜினின் முன்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இது மளமளவென பேருந்து முழுவதும் பரவி நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து ராணிப்பேட்டை தீயணைப்பு துறையின் விரைந்து வந்து நெருப்பை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் அரசு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. எலும்புக்கூடாய் காட்சி அளித்தது.
தீ விபத்துக்குள்ளான அரசு பேருந்து ஆயுட்காலம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளோடு சென்ற அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
