கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருமாண்டபதி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளியின் சமையலறை பகுதியில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு நிலவியது.
இப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 26 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரே ஆசிரியர் பணியாற்றி வரும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் மாணவர்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பத்திரமாக மீட்டார். இதனால் எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் அவ்வப்போது பள்ளிகள் மற்றும் கிராமங்களில் தீயணைப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்தி வருவதன் பயனாக, பொதுமக்கள் பதற்றமடையாமல் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தீ விபத்து சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்டது என்பது குறித்து சம்பவம் தொடர்பாக சத்துணவு பொறுப்பாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
