கோவை வடவள்ளி – சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக உலா வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, வடவள்ளி பகுதியில் மாலை நேரங்களில் குட்டிகளுடன் வரும் காட்டுப்பன்றிகள், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உணவிற்காகத் தேடுகின்றன. இதனால், சாலையின் குறுக்கே பன்றிகள் கூட்டமாக ஓடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே கோவையின் புறநகர் பகுதிகளில் சிறுத்தை, புலி நடமாட்டம் மற்றும் யானைகளின் வருகை பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வடவள்ளி மக்கள் காட்டுப்பன்றிகளால் நிம்மதியை இழந்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் இவை மனிதர்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக, வனத்துறையினர் இதில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “குறைந்தபட்சம் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வரும் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க பெரிய இரும்பு கூண்டுகளை அந்தந்தப் பகுதிகளில் வைக்க வேண்டும். பிடிபடும் பன்றிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும்” என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version