ஏழு வயது பேத்தியை தொடர்ந்து மூன்று மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தாத்தாவிற்கு,
வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை,சிறுமியின் தாயாருடைய தந்தை வைரவன்(58)என்பவர் தொடர்ந்து மூன்று மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13.02.2024 அன்று புகார் அளித்தார்.
தனது 7 வயது மகளை, தனது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் அதிர்ச்சி அடைந்த உத்தமபாளையம் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி, மற்றும் சிறுமிகள் தாத்தாவான வைரவன் என்பவரிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியை அவரது தாத்தாவை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களாக சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்ததுடன்,வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி அரிவாளால் சிறுமியின் காலிலும் வெட்டி துன்புறுத்தி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது..
இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 01/2024 ன் கீழ் குற்றவாளி வைரவன் மீது போக்சோ சட்டப்பிரிவுகள் 376 (AB), 506(ii), 5(n), 5(m),3(a), 4, 6 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14.02.2024 அன்று வைரவன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 23.04.2024 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை, தேனி மாவட்ட குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி கணேசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றவாளி வைரவன் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால்,
குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சிறப்பு சட்டப்பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும்,ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும்,அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும்,மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 376 (AB)ன் கீழ் ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும்,இந்திய தண்டனைச் சட்டம் 506(ii) ன் படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் இரண்டாயிரம் அபராதமும்,அபராதத் தொகையைக் கட்ட தவறினால் ஒரு மாத கடுங்காவல் தண்டனையும் என மொத்தம் ரூபாய் 12,000 அபராதமும், எஞ்சி உள்ள வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் சிறுமியின் புனர் வாழ்விற்காக தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் ரூ, 9,88,000 வழங்க வேண்டும் என்றும், சிறுமியின் கல்வி பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவிற்காக ரூ,1,88,000 – ஐ உடனடியாகவும்,மீதமுள்ள ரூபாய் 8 லட்சத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக சேமித்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதில் வரும் வட்டியை சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும், மேலும் குற்றவாளி வைரவன் ரூபாய் 12,000 ரொக்கத்தை சிறுமியிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.
தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளி வைரவன் மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
தனது மகள் வயிற்று பேத்தியான ஏழு வயது சிறுமியை சொந்த தாத்தாவே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற நிகழ்வு தேனி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..