மதுரை செல்லும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,595 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், மகளிர் குழுக்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் நிகழ்ச்சியில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருமங்கலம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவியது.
