பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெறும், இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பிரத்யேக பயிற்சிகள் அளித்து தயார் செய்து வருகிறார்கள். இதேபோல், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இப்போட்டிகளின்போது வாடிவாசல்களில் காளைகளை அவிழ்ப்பதையே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெருமையாக கருதுகின்றனர். இந்தநிலையில், பொங்கல் மற்றும் தமிழா் திருவிழாவையொட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை செயலா் சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது. விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.
காளைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது, விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார்
