தேச விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவர் அஸ்லாம், தேர்வெழுத சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் படித்து வந்த அஸ்லாம், சயீத், நஹல் இப்னு ஆகிய மூன்று மாணவர்கள், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, தேர்வுக்கு முந்தைய நாள் கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து மாணவர் அஸ்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிறுவனத்தின் உதவிப் பதிவாளரான அவினவ் தாக்கூர் மீது பாலியல் புகார் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தான் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் அஸ்லாம் குறிப்பிட்டிருந்தார். சமூகப் பணி இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில், தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நீக்கப்பட்டதாகவும் மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி, மனுதாரர் மீது யூகத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். முதலாம் ஆண்டில் அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
எனவே, மாணவர் அஸ்லாமை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, மனு குறித்து ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.