கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2009 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை துணைவேந்தராக பதவி வகித்தவர் முருகேச பூபதி. இவர், தனது பதவிக்காலத்தில் கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டது.

நிபுணர்கள் அறிவுரையை மீறி, இந்த இயந்திரங்கள் கொள்முதல் செய்ததன் மூலம், தனியார் நிறுவனம் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் லாபமடையச் செய்ததாகவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி தாக்கல் செய்த மனுவை கோவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு ஊழியராக இருந்த முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக வழக்கு தொடர அரசு ஒப்புதல் பெறாததால், இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என துணைவேந்தர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பல்கலைக்கழக சட்டப்படி துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய அரசின் முன் அனுமதி தேவையில்லை என்பதால், முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக வழக்கு தொடர அரசின் முன் அனுமதியும் தேவையில்லை எனக் கூறி, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், கடந்த 2012 ம் ஆண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என கோவை சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version