கோவையில் ரூ.1.5லட்சம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

கோவையில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக இந்திரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ”சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கோயிலில் அதிக வருவாய் வருவதாகவும், ஆனால் அந்தக் கோயிலில் முறையான நிர்வாகம் இல்லாததால், அக்கோயிலை இந்து சமய அறநிலைய துறை எடுத்துக் கொள்ள வேண்டும்” எனவும் கூறியிருக்கிறார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும் சுரேஷ் குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 16-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ”கோயிலை அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும் நடைமுறையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், சுரேஷ் குமார், அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை சந்தித்த போது, ‘கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால், தனக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் தர வேண்டும்’ என்று கேட்டதாக கூறப்படுகிறது.

பிறகு இருவருக்கும் இடையே பேரம் பேசப்பட்டுள்ளது. இரண்டு லட்ச ரூபாயாவது தரவேண்டும் என இந்திரா கூற, இறுதியில் ரூ.1.5லட்சம் கொடுத்தால் மட்டுமே பரிந்துரை செய்யப்படும் என கூறியிருக்கிறார் இந்திரா. இது குறித்து சுரேஷ் குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய ரூ.1.5லட்சத்தை இந்திராவிடம் சுரேஷ் வழங்க, அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்திராவை கையும், களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version